×

தேர்தலுக்காக 75 நாளில் ரூ.11 லட்சம் கோடி டம்மி திட்டங்கள் மோடியின் அடிக்கல் அட்ராசிட்டி

* ஒவ்வொரு மாநிலமாக பயணம்: மக்களை வளைக்க போட்ட திட்டம்

* மதுரை எய்ம்ஸ், நதிநீர் இணைப்பு வரிசையில் படம் காட்டும் பாஜ அரசு

2019ம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்பு, ஜனவரி 27ம் தேதி மதுரை அருகே தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1,978 கோடியில் எய்ம்ஸ் கட்டுமானத் திட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர மருத்துவமனை கட்டுமானத்துக்கான எந்த ஒரு பணியும் துவக்கப்படாத நிலையில், 3 ஆண்டுகள் கழித்து மதுரை வந்த பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கூறியது அதிர்ச்சியாகவும், பாஜவினர் அப்பட்டமாக பொய் சொல்ல தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்தது.

அடிக்கல் நாட்டி வைத்து 5 ஆண்டுகள் முடிந்து மீண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதுதான் கட்டுமான பணி துவக்கப்பட்டது. இதுவும் தேர்தலுக்காக படம் காட்டும் வேலைதான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி 5 ஆண்டுகள் எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு, மீண்டும் தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்த துவங்கினார் பிரதமர் மோடி.

இதன்படி இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து மார்ச் 12ம் தேதி வரை 75 நாட்களில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் பிரதமர் மோடி. பத்தாண்டுகளில் என்ன செய்தோம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில்தான் இந்த நாடகத்தை ஒன்றிய அரசு அரங்கேற்றி வருகிறதா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் பலரும் எழுப்பவே செய்கின்றனர்.

இதற்கெல்லாம் பெரிய விளக்கங்களையோ ஆதாரங்களையோ கூட தேடத் தேவையில்லை. எந்த ஒரு ஆளுங்கட்சியும் தேர்தலை சந்திக்கும்போது தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டுத்தான் பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால், ஒன்றிய பாஜ அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் இன்று வரை காங்கிரஸ் ஆட்சியை மட்டுமே குறைசொல்லிக் கொண்டிருக்கிறது. ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்பார்கள்.

இப்படித்தான் சொல்வதற்கு எதுவுமின்றி வெறுங்கையில் முழம் போட முடியாது என்பதால் பல லட்சம் கோடி திட்டங்களை அவசர கதியில் துவக்கி வைத்து மாய பிம்பத்தைக் கட்டமைக்க பாஜ முயற்சித்து வருகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரு பயப்பனஹள்ளி – ஒயிட் பீல்டு இடையிலான நம்ம மெட்ரோ திட்டப் பணியை மோடி துவக்கி வைத்தார். அப்போது 20 சதவீத பணி முடியவில்லை. முக்கியமான இணைப்பே நடக்கவில்லை.

அப்படியிருக்க இந்த அரைகுறை திட்ட திறப்பு விழாவால் யாருக்குப் பலன்? இதுபோல், உக்ரைன் போரால் இந்திய மாணவர்கள் அங்கு சிக்கித் தவித்த நிலையிலும், மகாராஷ்டிராவில் முடிவடையாத திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் வந்ததை சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த வரிசையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 2 மாதங்கள் இருந்த நிலையில் பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்ட பல திட்டங்கள் முழுமை பெறாதவை.

சமீபத்தில் இது குறித்து குறிப்பிட்ட, ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி ‘முழுமை பெறாத திட்டங்களை கூட தேர்தலுக்காக அவசர கதியில் மோடி திறந்து வைக்கிறார்’ என குற்றம் சாட்டியிருந்தார். ஆட்சிக்காலம் நிறைவுறும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஆளும் அரசுகள் திட்டங்களை துவக்கி வைப்பது புதிதல்ல… ஆனால், முடியாத திட்டங்களைத் திறந்து முடிந்ததாக காட்டுவதும், அடுத்ததாக ஆட்சிக்கு வருவது மக்கள் கையில்தான் என்ற நிலையிலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் எந்த வகையில் சேர்ப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து 2 முறை ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், குஜராத்தில் ரூ.1.06 லட்சம் கோடி திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி ‘‘ 10 ஆண்டுகளில் இது டிரைலர்தான்… நான் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது’’ என குறிப்பிட்டார். முழுமை பெறாத படத்தை வைத்து முடிந்ததாக படம் காட்டியதைத்தான் டிரைலர் என அவர் குறிப்பிடுகிறாரா? இந்திய தேசத்தை சிறப்பாகக் கட்டமைக்க வேண்டும் என்பதிலும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதிலும் யாரும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.

140 கோடி இந்தியர்களின் கனவும் அதுதான். ஆனால், அந்த கனவை நிறைவேற்ற வேண்டிய ஒரு அரசு இப்படி ‘படம் காட்டுவது’ கனவை பொய்யாய் பழங்கதையாய் மாற்றாதா என்பதும், இந்த ஏமாற்றத்துக்கு மக்கள் என்ன விதமான பதிலடியை தேர்தலில் தரப்போகிறார்கள் என்பதைக் கூட இந்த ஒன்றிய அரசு உணரவில்லையா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆட்சி நிர்வாகத்தில், திட்ட செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பதாக பாஜவினர் கூறி வருகின்றனர்.

ஆனால், ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளிப்படைத் தன்மை என்பதே இல்லை எனும் அளவுக்கு பல விஷயங்கள் முழுமையாக தெரிவிக்கப்படுவதில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர கதியில் அரைகுறை திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. பல திட்டங்களுக்கு அடிக்கல் தான் நாட்டப்பட்டது. ஆனால் ‘இவ்வளவு திட்ட மதிப்பீட்டில் திட்டங்கள் துவக்கப்பட்டன அல்லது அர்ப்பணிக்கப்பட்டன’ என விளக்கமான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தேர்தலில் கவர்ச்சி திட்டங்களை அறிவிப்பது போல, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ள ஒன்றிய அரசு, அதனை எவ்வாறு நிறைவேற்றப்போகிறது? அதற்கான நிதி எங்கிருந்து வரும்? எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என ஒரு போதும் தெரிவிப்பதில்லை. பல திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதே கதிதான் தேர்தல் நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கும் ஏற்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* இடைத்தேர்தலுக்காக நடந்த கூத்து
கடந்த 2018ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கைரானா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடப்பதற்கு சில தினங்கள் முன்பு டெல்லி – மீரட் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது 69 சதவீத பணிகள் நிறைவு பெறவில்லை. எல்லாம் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கத்தான். இடைத்தேர்தலுக்கே அப்படியென்றால்… இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குச் சொல்லவா வேண்டும்?.

* ஆட்சியில் இருந்த போதெல்லாம் வெளிநாட்டு பயணங்களில் மூழ்கியிருந்தார்
மோடி. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களுக்கு பறந்து பறந்து சென்றார். டிசம்பர் இறுதியில் இருந்து மார்ச் 15ம் தேதி வரை 75 நாட்களில் நடந்தவற்றில் பெரும்பான்மையானவை அடிக்கல்நாட்டு விழாதான். டிசம்பர் 18ம் தேதி வாரணாசியில் ரூ.19,500 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுபோல் அகமதாபாத்தில் ரூ.1.06 லட்சம் மதிப்பிலான திட்டங்கள், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) கீழான திட்டங்கள், காஷ்மீரில் ஜம்மு விமான நிலையத்தின் புதிய டெர்மினலுக்கான கட்டிடம், பெட்ரோலிய கிடங்கு மற்றும் பொது பயன்பாட்டு வசதிகள் பணிமனை, சாலை மற்றும் ரயில் இணைப்பு திட்டங்கள்.

குடிமை மற்றும் நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள், கடைசியாக ஜனவரி 12ம் தேதி நாடு முழுவதும் ரூ.85,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்பட ரூ.1,06,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, உ.பி, மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களுக்கு அவர் அடிக்கடி சென்று திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியது தேர்தலுக்கான ஸ்டெண்ட் என்பதை அப்பட்டமாக காட்டியதாக மக்கள் விமர்சிக்கின்றனர்.

* நதிநீர் இணைப்பு திட்டம் என்னாச்சு?
விவசாயிகள் கோடை காலத்தில் வறட்சியாலும், மழைக்காலத்தில் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக ஒன்றிய பாஜ அரசு அறிவித்தது. இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதியுடன் இணைப்பது, வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளுடன் இணைப்பது, மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது என திட்டம் வகுக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதம் பெறும் வரவேற்பு எழுந்தது. முதல் கட்டமாக வட மாநிலங்களில் கங்கை உட்பட 60 நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று வரை இதில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. ஒன்றிய பட்ஜெட்டிலும் இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த திட்டத்தையே ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு விட்டது.

விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்துக்காக செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய பாஜ அரசுதான், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது. விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கூட கிடைக்காமல் அவர்களை போராட வேண்டிய நிலைக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தலுக்காக 75 நாளில் ரூ.11 லட்சம் கோடி டம்மி திட்டங்கள் மோடியின் அடிக்கல் அட்ராசிட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Madurai ,AIIMS ,BJP government ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒப்புதல்